பென்னாகரம் அருகே புதிய கற்கால கற்கருவிகள் கண்டெடுப்பு
பென்னாகரம் அருகே புதிய கற்கால கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.;
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வரலாற்று ஆய்வு மையத்தை சார்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் தமிழாசிரியர்கள் பெருமாள், முருகன் தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி, வரலாற்று ஆசிரியர்கள் திருப்பதி , முருகா கணேசன் ஆகியோர் அடங்கிய ஆய்வுக்குழுவினர் பல்வேறு இடங்களில் வரலாற்றுத் தடயங்கள் குறித்த கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் பழங்கற்காலக் கருவிகள்,கற்கோடாரிகள் புதைவிடங்கள், நடுகற்கள் உள்ளிட்ட பலவற்றை கண்டறிந்து அவற்றை ஆவணப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பென்னாகரத்தை அடுத்த மஞ்சநாயக்கன அள்ளி பகுதியில் சமீபத்தில் நடத்திய கள ஆய்வில் 4500 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்கால கருவிகளை ஆய்வு குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறும்போது, தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த மஞ்சநாயக்கனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டோம். மஞ்ச நாய்க்கனஅள்ளி, காட்டம்பட்டி மற்றும் காளேகவுண்டனூர் ஆகிய ஊர்களில் 4500 ஆண்டுகளுக்கு முந்தைய வேட்டையாடப் பயன்படுத்திய கற்காலக் கருவிகள் கோவிலில் வழிபாட்டில் உள்ளதை கண்டறிந்தோம்.
இதன் மூலம் இப்பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்கள் வாழ்ந்தனர் என்பதை அறிய முடிகிறது. மேலும் இப்பகுதியில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் நிறைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு கிடைத்துள்ள கற்கருவிகள் பெரும்பாலும் கூழாங்கற்களை பயன்படுத்தி செய்யப்பட்டுள்ளது. நன்கு மெருகேற்றப்பட்ட கற்கோடாரிகள், இருமுனைக்கருவிகள் , தேய்ப்பான்கள் போன்றவை கிடைத்துள்ளது. கருவிகள் அனைத்தும் கையில் பிடிப்பதற்கு ஏதுவாக நன்கு தேய்த்து வழவழப்பாக்கப்பட்டுள்ளது.
இக்கருவிகள் விலங்குகளை வேட்டையாடவும் அவற்றின் தோல்களை நீக்கவும் மரப்பட்டைகளை உரிக்கவும் கிழங்குகளை அகழ்ந்தெடுக்கவும் பயன்படுத்தியிருக்கலாம். மேலும் தருமபுரி கிருஷ்ணகிரி பகுதிகளில் கற்கால கருவிகளை முதன் முதலில் கண்டறிந்தவர சர் இராபர்ட் புரூஸ் புட் என்ற ஆங்கிலேயர் என்பது குறிப்பிடத்தக்கது.