பென்னாகரம் அருகே சஞ்சீவிராய சுவாமி கோயிலில் பக்தர்களின் வருகைக்கு தடை
பென்னாகரம் அருகே சஞ்சீவிராய சுவாமி திருக்கோயிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்களின் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவிப்பு
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகேயுள்ள தித்தியோப்பனஅள்ளி ஊராட்சியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற அருள்மிகு சஞ்சீவிராய சுவாமி திருக்கோயில். மலைமீது அமைந்துள்ள இந்த திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இக்கோயிலில் வழிபட சனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழிபட்டு செல்வது வழக்கம். தற்பொழுது கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் தமிழக அரசு வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வதற்கு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் சஞ்சீவிராய சுவாமி திருக்கோவில் இந்த ஆண்டு புரட்டாசி மாதம் 5 சனிக்கிழமைகளிலும் நடைபெற உள்ள திருவிழா மற்றும் பக்தர்களின் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் நுழைவு வாயில் பகுதியிலேயே அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சஞ்சீவிராய சுவாமி திருக்கோயிலில் வழிபட ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். இன்று கோவிலில் வழிபட அனுமதி இல்லை என அறிந்து வழிபாடு நடத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இருப்பினும் பக்தர்கள் கோயில்கள் செல்லாமல் மண்டபத்தின் அருகே அலங்கரிக்கப்பட்டிருந்த சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி சென்றனர்.