ஒகேனக்கல்லில் நீர் வரத்து 40 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: ஆற்றில் பரிசல் இயக்க தடை

ஒகேனக்கல்லில் நீர் வரத்து 40, ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை

Update: 2021-10-26 06:15 GMT

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பிரதான அருவிக்கு செல்லும் நடைப்பாதைக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதனால் கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி தண்ணீர்  திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக கேரளா, கர்நாடக, தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 20,000 கன அடியாக இருந்த நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 32,000 கன அடியாக இருந்தது. தற்போது 40 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கலில் ஐந்தருவி, மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

மேலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பிரதான அருவிக்கு செல்லும் நடைப்பாதைக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளப் பெருக்கால், ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கடந்த சில நாட்களாக மழை குறைந்ததால், நீர்வரத்து குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், காவல் துறை, தீயணைப்பு மற்றும் வருவாய் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதால், மத்திய நீர் வள ஆணைய அலுவலர்கள் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News