2 மாதங்களுக்கு பிறகு அரூரில் திறக்கப்பட்ட உழவர் சந்தை
இரண்டு மாதங்களுக்கு பிறகு அரூரில் திறக்கப்பட்ட உழவர் சந்தையில், ய்கறிகள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.;
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, அரூர், பாலக்கோடு, பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக உழவர் சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது வைரஸ் தொற்று குறைந்து வரும் நிலையில், பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி, உழவர் சந்தைகளை திறக்க, அனுமதி தரப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி, அரூர், பாலக்கோடு, பென்னாகரம் பகுதியில் உள்ள உழவர் சந்தைகள் இரண்டு மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளன. அரூரில் உள்ள உழவர் சந்தையில், 27 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று உழவர் சந்தை திறக்கப்பட்டுள்ளதால், தக்காளி, கத்திரி, முள்ளங்கி, கேரட், பீட்ரூட், வெண்டை, பச்சை மிளகாய், முட்டைகோஸ் மற்றும் கீரைகள், பழங்கள் உள்ளிட்ட ஏராளமான காய்கறிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது.
வெளிமார்க்கெட்டில் அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதால் இன்று உழவர் சந்தை திறந்தவுடன் அரூர் பகுதியில் உள்ள மக்கள் ஏராளமானோர் காய்கறிகளை வாங்குவதற்காக வந்திருந்தனர். மேலும் வெளிக்கடைகளை விட உழவர் சந்தையில் காய்கறிகள் குறைந்த விலைக்கு கிடைப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இனிவரும் நாட்களில் உழவர் சந்தைக்கு பொது மக்களின் வருகை மற்றும் காய்கறிகளின் வருகையும் அதிகரிக்கும் என உழவர் சந்தை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.