டாக்சியும் சுற்றுலா வாகனமும் நிறுத்தவா பஸ் ஸ்டாண்ட்..? தீர்த்தமலை பக்தர்கள் அவதி..!
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்திபெற்ற ஆலயம் ஆகும். இந்த கோயிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம்.;
புகழ்பெற்ற தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்த கோயில் வழியாக திருவண்ணாமலை பஸ்களும் சென்று வருகின்றன. இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களை சாலையிலேயே பஸ்களை நிறுத்தி இறக்கிச் செல்கின்றனர். அதேபோல பஸ்களில் ஏற்றுவதும் சாலையில் வைத்தே ஏற்றுகின்றனர்.
சாலையில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டன. இவ்வாறான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு 2013ம் ஆண்டில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. ஆனால், அந்த பஸ் ஸ்டாண்ட் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை என்று கூறுகிறார்கள்.
இது குறித்த பொதுமக்கள் கூறும்போது , ‘பஸ் ஸ்டாண்ட் கட்டி பல வருஷம் ஆக்ச்சு. ஆனா, இதுவரை பயன்பாட்டுக்கு வரலை.' என்றார் ஒருவர்.
எல்லா அரசு மற்றும் தனியார் பஸ்கள் சாலையிலேயே நின்று செல்கிறது. பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயில் காலங்களிலும் மழைகாலங்களிலும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காகத்தான் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. ஆனால் அந்த நோக்கம் நிறைவேறவில்லை.
பஸ்கள் சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் இன்னும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருகிறது. பஸ் ஸ்டாண்ட் முழுவதும் சுற்றுலா வாகனங்கள், டாக்சிகள் மற்றும் சிறு வணிகப் பயன்பாட்டு வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிவிட்டது.
எனவே, பயனற்று கிடக்கும் பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுடன் எல்லா பஸ்களும் பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து செல்ல வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிடவேண்டும் என்கின்றனர்.