பாப்பிரெட்டிப்பட்டி அருகே காதல் திருமணம் செய்த பெண் கிணற்றில் குதித்து தற்கொலை
பாப்பிரெட்டிப்பட்டி அருகே காதல் திருமணம் செய்த பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி மாவட்டம் அரூர் பெரியார் நகரைச் சேர்ந்தவர் ரஷிதாபேகம் வயது,23., இவரும் பாப்பம்பாடி காந்தி நகரைச் சேர்ந்த சரவணன்,வயது 26., அரூரில் உள்ள தனியார் நகைக்கடையில் சேல்ஸ்மேன்களாக பணியாற்றி வந்தனர்.
அப்போது இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் காதலித்து வந்துள்ளனர். கடந்த ஜூன் 24.ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி காளிப்பேட்டை மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின் கடந்த 30 ந்தேதி பாப்பிரெட்டிப்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
இதனால் ரஷிதாபேகத்தின் சகோதரி சோபிதாபேகத்தின் கணவர் அகமதுல்லா, சோபிதாவை திட்டியுள்ளார். இதனால் ரஷிதாபேகம் சோகத்துடன் கணவர் வீட்டில் இருந்தவர் திடிரென மாயமானார். நேற்று முன் தினம் மனைவியை காணாமல் தவித்த சரவணன் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அவரின் விவசாய கிணற்றின் அருகே ரஷிதாபேகத்தின் செருப்பை கண்டவர்கள் உடனடியாக அ.பள்ளிபட்டி போலீசில் புகார் செய்தனர். பாப்பிரெட்டிபட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வமணி தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பல மணிநேரம் போராடி ரஷிதாபேகத்தின் சடலத்தை மீட்டனர்.
இதனிடையே உறவினர்கள் சரவணனை கைது செய்யக்கோரி அவரது வீட்டின் ஜன்னல் கதவுகளை உடைத்தனர். சம்பவ இடத்திற்கு தர்மபுரி ஏடிஎஸ்பி அண்ணாமலை தலைமையிலான போலீசார் விரைந்து வந்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி சடலத்தை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விசாரணையில் ஏழு பக்கம் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து அரூர் உதவி கலெக்டர் முத்தையன் விசாரணை செய்து வருகிறார்.