கடலூரில் வெள்ளம்: 20 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிப்பு

கடலூரில் உள்ள மூன்று ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், தாழ்வான மற்றும் விளைநிலங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் வேதனை

Update: 2021-11-20 14:45 GMT

வெள்ளநீரில் மூழ்கியுள்ள பயிர்கள் 

வட கிழக்குப் பருவமழை காரணமாக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பின. இதனிடையே கர்நாடகா மற்றும் கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சாத்தனூர் அணை திறக்கப்பட்டது.

சாத்தனூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் அதிகரிப்பால் தென்பெண்ணை ஆற்றில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர் வீணாக கடலில் கலக்கிறது. தென்பெண்ணை ஆற்றின் கரைகளை உடைந்து குடியிருப்பு பகுதிகளையும், விளைநிலங்களிலும் புகுந்துள்ளது.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, நெல்லிக்குப்பம் பகுதியில் தென்பெண்ணையாற்றிலும்,கெடிலம் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடலூர் அருகே அழகிய நத்தம், வடக்கு நத்தம் இரண்டாயிரம் விளாகம்,மணல்மேடு, எம்.பி அகரம், களையூர், கிருஷ்ணாபுரம், உச்சிமேடு, நாணமேடு, பெரியகங்கனாங்குப்பம், கோண்டூர், நத்தப்பட்டு, சாவடி உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் சுமார் 5000 ஏக்கர் விளைநிலங்கள் இப்பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

அதேபோல கோமுகி அணை திறப்பு, மணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கு என மாவட்டம் முழுவதும் 3 ஆற்றின் வெள்ள நீர் சூழ்ந்ததால் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் வீணாகி உள்ளன. நடவு செய்யப்பட்ட நெல் கரும்பு மணிலா உள்ளிட்ட பயிர்கள் இந்த மழை, வெள்ளத்தால் சேதம் அடைந்து உள்ளது. அரசு கணக்கெடுத்து முறையான இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News