இரு வேறு விபத்துகளில் இரண்டு குற்றவாளிகள் கை முறிவு
காவலர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற போது, தேயிலை காட்டில் கீழே தவறி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை காவல் நிலைய பகுதியில் வசிக்கும் ஹரிஹரன். இவர் வெற்றிவேல் என்பவரை கத்தியால் தாக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும் அவரிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த ரோந்து காவலர்கள் ஆயுதத்துடன் சுற்று திரிந்த ஹரிஹரனை பிடிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது காவலர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற போது, நடுமலை தேயிலை காட்டின் அருகே ஹரிஹரன் கீழே தவறி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் அவரதுஸவலது கையில் முடிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல கோவையில் வீட்டை உடைத்து பொருட்களை கொள்ளையடிக்கும் பிரபல கொள்ளையன் சாலமன். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கார், பைக், சிலிண்டர், நகை, பணம் போன்றவற்றை கொள்ளையடித்து 16 வழக்குகளில் கைதாகி உள்ள இவர் மீது, 3 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பீளமேட்டில் கார் ஒன்றினை கொள்ளையடித்து விட்டு வால்பாறை செல்லும் வழியில் அந்தக் கார் விபத்துக்குள்ளானது. அதில் சாலமன் கையில் காயம் ஏற்பட்டது. பின்னர் கையில் காயங்களுடன் கைது செய்யப்பட்ட சாலமனிடம் இருந்து கார், பைக், 1,20,000 ரொக்கம், 5 சவரன் நகை ஆகியவற்றை காவல் துறையினர் கைப்பற்றினர்.