வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் உள்ள குரங்கு அருவி அருகே கொண்ட ஊசி வளைவு பகுதியில் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன். 55 வயதான இவர், 13 குழந்தைகள் மற்றும் 18 பெரியவர்கள் என 31 நபர்களை கடந்த 24 ஆம் தேதி அன்று திருவாவூரிலிருந்து ஐந்து நாள் பயணமாக கேரளா நோக்கி சுற்றுலா பயணம் அழைத்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் கேரளா மாநிலம் சென்று விட்டு வால்பாறை வழியாக வந்த இந்த சுற்றுலா பயணிகள் வால்பாறை பகுதியை சுற்றிப் பார்த்துள்ளனர். பின்னர் பொள்ளாச்சியை நோக்கி இரவு நேரத்தில் சுற்றுலா வாகனத்தில் வந்துள்ளனர் இந்நிலையில் வாகனத்தை ஓட்டி வந்த தினேஷ் (25 வயது) ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் உள்ள குரங்கு அருவி அருகே கொண்ட ஊசி வளைவு பகுதியில் உள்ள பாறையில் மோதி வாகனம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கியவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு மற்ற சுற்றுலா பயணிகள் மற்றும் சம்பவ இடத்திற்கு வந்த ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் சுற்றுலா மேற்கொண்ட 13 குழந்தைகள் மற்றும் 18 பெரியவர்கள் என 31 நபர்களுக்கும் படுகாயம் அடைந்த நிலையில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆழியார் காவல் நிலையம் மற்றும் காடம்பாறை காவல் நிலைய போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.