சோலையாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்வு
சோலையாறு அணை வால்பாறை யில் ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணையாக சோலையாறு அணை உள்ளது
நீர்வரத்து அதிகரிப்பால் சோலையாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்துள்ளது.
சோலையாறு அணை வால்பாறையில் ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணையாக சோலையாறு அணை உள்ளது. 160 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணைக்கு நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கேரளாவில் பெய்யும் மழையே ஆதாரமாக உள்ளது. கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக சோலையாறு அணை 25-ந் தேதி 100 அடியை எட்டியது. அதன்பின்னர் மழை இல்லாததால், அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வால்பாறை பகுதியில் லேசான மழை பெய்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் ஆங்காங்கே பலத்த மழை பெய்கிறது. இதன் காரணமாக வால்பாறையில் இதமான சூழ்நிலை நிலவுகிறது. இதனை அனுபவிக்க பிறமாவட்டம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பிறமாநிலங்களில் இருந்தும் ஏரளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
வால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 142.80 அடியாக உயர்ந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலேயே சோலையாறு அணை முழுகொள்ளளவை எட்டிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், கடந்த 1-ந் தேதி சோலையாறு மின்நிலையம் 1-க்கு திறக்கும் கேட்வால்வு பழுதடைந்தது. இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது கேட்வால்வில் உடைந்த உதிரி பாகங்கள் அகற்றும் பணி முடிந்து விட்டது.
தொடர்ந்து அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்த பணிகள் முடிந்து, சோலையாறு மின்நிலையம் 1 இயக்கப்பட்டு பரம்பிக்குளத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்று நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மழையளவு நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு: மேல் நீரார்-36, கீழ்நீரார்-12, வால்பாறை-24, சோலையாறு அணை-9.