கோட்டூரில் தார் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்..!
திமுக கவுன்சிலர் உள்ள பகுதியில் மட்டும் தார்சாலை அமைப்பதாக குற்றம் சாட்டினர்.;
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பேரூராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. கோட்டூர் பேரூராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் பதவி வகித்து வருகிறார். ஏழாவது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற சரண்யா என்பவர் கவுன்சிலராக இருந்து வருகிறார். இந்த ஏழாவது வார்டுக்கு உட்பட்ட ரெயின்போ கார்டன் பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கோட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகன்றனர்.
இதில் ஐந்தாவது வார்டு திமுக கவுன்சிலர் சித்ரா வார்டுக்கு உட்பட்ட முத்து நகரில் உள்ள சாலைகள் அனைத்தும் தார் சாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில், ஏழாவது வார்டுக்கு உட்பட்ட ரெயின்போ கார்டன் நகரில் உள்ள வீதிகளில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது.
அப்பகுதியில் உள்ள சாலையில் 120 மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்காமல் திமுக பேரூராட்சி தலைவர் புறக்கணித்து வருவதாகவும், திமுக கவுன்சிலர் உள்ள பகுதியில் மட்டும் தார்சாலை அமைப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலையில் ஐந்தாவது வார்டில் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ஏழாவது வார்டை புறக்கணிக்காமல் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதனை அடுத்து தகவல் அறிந்து வந்த கோட்டூர் காவல் நிலைய காவல் துறையினர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.