நிரம்பிய ஆழியார் அணை :கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணையில் முழு கொள்ளளவு எட்டியது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள வால்பாறை, சின்னக்கல்லார், பெரிய கல்லார் சோலையார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆழியார் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில் நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக ஆழியார் அணை 120 அடி கொள்ளளவை முழுமையாக எட்டியது. இதையடுத்து அணையின் ஒன்பது மதகுகளில் இருந்து 1133 கன அடி தண்ணீர் வெளியேற்றும் செய்யப்பட்டது. வெளியேற்றப்படும் தண்ணீர் ஆழியார் ஆற்றில் கரைபுரண்டு ஓடி வருகிறது.
இந்நிலையில் தொடர் மழை காரணமாக பாலாற்றில் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அங்கலகுறிச்சி அருகே மலையடிவாரத்தில் ஆற்றின் மையப்பகுதியில் அமைந்துள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலுக்கு செல்லும் பாலத்தின் மீது தண்ணீர் செல்கிறது.
இன்று ஆடி வெள்ளி என்பதால் பக்தர்கள் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலுக்கு அதிகளவு வழிபாடு செய்ய வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பக்தர்களின் பாதுகாப்பு கருதி ஆஞ்சநேயர் கோயிலுக்கு செல்ல கோயில் நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.