வனப்பகுதியில் அத்துமீறி யானை விரட்டிய அதிமுக பிரமுகருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம்..!
ஹை பீம் விளக்குகளை ஒளிரச்செய்து யானையை விரட்டிய மிதுனுக்கு வனத்துறையினர் ஒரு இலட்ச ரூபாய் அபராதம் விதித்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள இந்த புலிகள் காப்பகத்தில் யானை, புலி, வரையாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. இப்பகுதியில் வால்பாறை, டாப்சிலிப் போன்ற சுற்றுலா தலங்களும் இருப்பதால், அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
இப்பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்கு தொந்தரவு அளிக்கும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதுகாக்கப்பட்ட ஆனைமலை புலிகள் காப்பகத்தின் மைய வனப்பகுதியில் உள்ள நவமலை பகுதியில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் அதிமுக பிரமுகர் ஒருவர் காரில் அத்துமீறி நுழைந்துள்ளார். அப்போது அதிமுக கொடியுள்ள காரில் இருந்து ஏதிரே வந்த ஒரு காட்டு யானையை ஹை-பீம் விளக்குகளை ஒளிரச் செய்தும், அதிவேகமாக காரை இயக்கியும், ஓலி எழுப்பியும் விரட்டியடித்துள்ளார்.
பின்னால் இருந்து யானைக்கு மிக அருகில் வாகனத்தை வேகமாக ஓட்டியதால் யானை அச்சத்தில் ஓடியுள்ளது. இந்த காட்சிகளை அந்த நபர் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் பதிவேற்றியுள்ளார். பின்னர் அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து வனத்துறையினர் அந்த காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.
வனத்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் ஆனைமலை அருகே உள்ள கோட்டூர் பகுதியைச் சேர்ந்த மிதுன் என்பதும், அதிமுகவை சேர்ந்த அவர், அக்கட்சியின் இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் மிதுனுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து எச்சரித்துள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.