ஆனைமலை மாசாணியம்மன் கோவில் பாதுகாப்பு பணியில் போலி பெண் போலீஸ்

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலி பெண் போலீசை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

Update: 2024-09-03 14:45 GMT

போலி  பெண் போலீஸ் ரீத்தா

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாக இருந்து வருகிறது. இந்தக் கோவிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வழிபாடு செய்ய வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று அமாவாசை என்பதால், அதிக அளவில் கூட்ட நெரிசல் இருந்தது. இதனால் காவல் துறையினர் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கோயிலில் ஒரு பகுதியில் கூட்ட நெரிசலை சீர் செய்யும் பொருட்டு பெண் காவலர் ஒருவர் ஈடுபட்டிருந்தார்.

அந்தப் பெண் காவலரின் நடவடிக்கைகள் சந்தேகப்படும்படியாக இருந்துள்ளது. இதையடுத்து காவல் துறையினர் அந்தப் பெண் காவலரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 34 வயதான ரீத்தா என்பதும், காவலர் போல உடை அணிந்து போலி போலீசாக சுற்றி திரிந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

மேலும் காவல் பணியின் மீதுள்ள ஈடுபாட்டினால் காவல் துறையினரின் உடை அணிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக ரீத்தா தெரிவித்தார். இந்நிலையில் போலியாக போலீஸ் வேடமிட்ட ரீத்தாவை ஆனைமலை காவல் நிலைய காவல் துறையினர் இதுபோல இனிமேல் நடக்க கூடாது என எச்சரிக்கை  செய்து அனுப்பினர். இந்த சம்பவம் ஆனைமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News