வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் வாகனங்களை துரத்திய ஒற்றை காட்டு யானை

வால்பாறை பொள்ளாச்சி சாலையில் காரில் சென்றவர்களை துரத்திய ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர்.

Update: 2024-06-10 05:19 GMT

ஒற்றை காட்டு யானை

கோவை மாவட்டம் வால்பாறை பகுதி முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். இப்பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கும், தேயிலை தோட்ட பகுதிகளுக்கும் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் வால்பாறையில் சமீப காலமாக வன வலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருவதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் உள்ள சோலை குறுக்கு பகுதியில் கடந்த ஒரு வார காலமாக ஒற்றை யானை நடமாடி வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வால்பாறை பள்ளி ஆசிரியை தனது காரில் வரும்போது காட்டு யானை காரை தாக்கி சேதப்படுத்தியது. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். தொடர்ந்து காட்டு யானை அப்பகுதியில் நடமாடி வருகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் யானையை தொந்தரவு செய்து வருகின்றனர்.

மேலும் யானை அருகே சென்று செல்பி எடுக்கும் மோகத்தில் யானையை தொந்தரவு செய்து வருகின்றனர். இதில் யானை கோபப்பட்டு ஆக்ரோஷமாக அந்த வழியாக செல்பவர்களை தாக்க ஓடிவரும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானையை கும்கி யானைகள் வைத்து பிடித்து வேறு பகுதியில் கொண்டு போய் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News