கதவை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள்: மக்கள் அச்சம்
ஒரு யானை திடீரென வீட்டின் கதவை உடைத்து உணவு தேடியது. இதனால் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் மற்றும் மருதமலை வனப்பகுதியில் தற்போது 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை ஓட்டியுள்ள கிராமங்களில் இரவு நேரங்களில் புகுந்து வருகின்றன.
மேலும் குடியிருப்பு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள அரிசி, புண்ணாக்கு போன்றவற்றை சாப்பிட்டு வருகின்றன. யானை நடமாட்டத்தால் தோட்டத்தில் குடியிருப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் யானைகள் தோட்டத்திற்குள் புகுந்தால் சுயமாக விரட்டக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் தொண்டாமுத்தூர் அடுத்த வண்டிக்காரனூர் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவரது தோட்டத்திற்குள் நேற்று இரவு இரண்டு யானைகள் புகுந்துள்ளன. பின்னர் அங்குள்ள பயிர்களை சாப்பிட்டு விட்டு, அருகில் தோட்ட பணியாளர்கள் தங்கியுள்ள குடியிருப்பு அருகே யானைகள் சென்றன. அப்போது ஒரு யானை திடீரென வீட்டின் கதவை உடைத்து உணவு தேடியது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அச்சத்தில் வீட்டின் உட்புறம் அமர்ந்து கொண்டனர்.
பின்னர் அந்த யானை அங்கிருந்த அரிசி மற்றும் காய்கறிகளை சாப்பிட்டு விட்டு சென்றது. முன்னதாக யானை கதவை உடைத்து உணவு தேடியபோது வீட்டின் உள்ளே இருந்தவர்கள் "ஒன்னும் இல்லை போ சாமி அவ்வளவு தான்" என கூறினர். இதனை அருகில் இருந்த மற்றொரு நபர் வீடியோ எடுத்துள்ளார். அந்த காட்சிகள் தற்போது சமூக வலதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில் வனத்தை ஒட்டி தோட்ட பகுதியில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், தோட்டங்களில் யானைகள் புகந்தால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் தெரிவிக்கப்படும் பட்சத்தில் வனத்துறையினர் அங்கு வந்து யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டுவார்கள் என தெரிவித்துள்ளனர்.