காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு ; கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
Coimbatore News- தோட்டத்து வீட்டிலோ வெளியேவோ, திறந்த வெளியிலோ யாரும் தங்க வேண்டாம். இரவு நேரங்களில் வாகனங்களிலோ தனியாக செல்லவேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது.
Coimbatore News, Coimbatore News Today- கோடை துவங்கும் முன்னரே வெயில் வாட்டி வதைப்பதால் கடும் வறட்சி நிலவுகிறது குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நிலவும் கடும் வறட்சி காரணமாக வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக யானை உள்ளிட்ட வன விலங்குகள் அருகில் உள்ள குடியிருப்புகளில் புகுந்து வருகிறது.
கேரள மாநில எல்லையும் கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட எட்டிமடை, கரடி மடை ,மாதம்பட்டி உள்ளிட்ட வனப் பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால், ஏராளமான யானைகள் இரவு நேரங்களில் அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து வருகிறது. வனப்பகுதியில் வன விலங்குகள் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டிகள் அமைக்கப் பட்டிருந்தாலும் உணவு தேவைக்காக யானைகள் வெளியே வருவது தொடர்ந்து வருகிறது.
தற்போது இந்த பகுதியில் 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகமிட்டுள்ளதால் இந்த யானைகள் இரவு நேரங்களில் குடியிருப்பை நோக்கி வருவதால் அவற்றை மீண்டும் வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.எனினும் யானைகளின் நடமாட்டம் அதிகரித்தே காணப்படுகிறது.
இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை ஆண் காட்டு யானை ஒன்று கரடிமடை கிராமத்திற்குள் புகுந்துள்ளது.அப்போது விஷ்ணு என்பவர் தோட்டத்து வீட்டின் வாசலில் தூங்கிகொண்டிருந்த பணியாளர் நாகம்மாள் என்ற 70 வயது மூதாட்டி சத்தம் கேட்டு எழுத்து பார்த்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் வந்த ஒற்றை ஆண் காட்டு யானை மூதாட்டியை கீழே தள்ளியது.இதில் தலை மற்றும் உடல் பகுதியில் மூதாட்டிற்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து அங்கிருந்து நகர்ந்த யானை அருகில் இருந்த மற்றொரு தோட்ட வீட்டில் வைத்திருந்த அரிசியை யானை எடுக்க முயன்றது. அப்போது அங்கு தூங்கி கொண்டிருந்த வேலையாட்களை சத்தம் போட்ட போது, எதிர்பாராத விதமாக தள்ளியதில் தனலெட்சுமி என்பவரும் காயம் அடைந்தார்.
ஒற்றைக் காட்டு யானை வீடுகளில் வைக்கப்பட்டுள்ள அரிசியை எடுக்க வந்த பொழுது அடுத்தடுத்து இந்த இரண்டு சம்பவங்களும் நடைபெற்ற நிலையில் வியாழக்கிழமை அதிகாலையில் தீத்திபாளையத்தில் முதியவர் ஒருவரையும் இந்த ஒற்றை யானை தள்ளியதில் அவர் காயமடைந்தார்.
இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின் பேரில் மதுக்கரை வனச்சரகர் அருண்குமார் தலைமையில் வனப்பகுதியை ஒட்டிய கரடிமடை, மத்திபாளையம், கவுண்டன் பதி,தீத்திபாளையம், மோளப்பாளையம் மற்றும் மூலக்காடுபதி ஆகிய கிராம பகுதிகளுக்கு சென்று ஒற்றை காட்டு யானை நடமாட்டம் குறித்து எச்சரிக்கை வழங்கினர்.
மேலும் இந்த பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம் இருப்பதால் வீட்டிற்க்கு வெளியேவோ தோட்டத்து வீட்டிலோ வெளியேவோ, திறந்த வெளியிலோ யாரும் தங்க வேண்டாம். இரவு நேரங்களில் வாகனங்களிலோ தனியாக செல்லவேண்டாம் என்றும் தோட்டத்தில் உள்ள வீடுகளில் அரிசி, புண்ணாக்கு ,தவுடு மற்றும் கொள்ளு, போன்ற பொருள்களை வைப்பதை தவிர்க்குமாறு எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.