ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை ; போலீசார் விசாரணை

Coimbatore 4 Persons Family Suicide ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2024-03-20 10:45 GMT

தற்கொலை செய்திக்கான மாதிரி படம்

Coimbatore 4 Persons Family Suicide

கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். 54 வயதான இவரது மனைவி விசித்ரா (46). இவர்கள் தங்களது மகள்கள் ஸ்ரீநிதி (25), ஜெயநிதி (14) ஆகியோருடன் வசித்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மணி ரைஸ்மில் என்ற பெயரில் அரிசி மில் ஒன்றை அவர் செல்வபுரம் பகுதியில் நடத்தி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த ரைஸ் மில்லில் சுமார் 18 கோடி ரூபாய் அளவிற்கு கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கடனில் இருந்து தற்போது மீண்டு வந்துள்ள ராமச்சந்திரன், தற்போது மது பாட்டில்களுக்கு பயன்படுத்தப்படும் மூடிகளை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை, ரைஸ் மில் இருந்த வளாகத்திலேயே நடத்தி வருகிறார். இந்த வளாகத்திலேயே அவர்களது வீடும் அமைந்துள்ளது. மகள் ஸ்ரீநிதி கனடாவில் பட்டப்படிப்பு பயின்று வந்துள்ளார். மேலும் அருகில் உள்ள காலியிடத்தில் வீடு ஒன்றை ராமச்சந்திரன் கட்டி வந்ததாக கூறப்படுகிறது. கடந்து சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீநிதி வீட்டிற்கு வந்திருந்தார்.

நேற்று இரவு வழக்கம் போல் நால்வரும் தூங்கச் சென்றபோது, வீட்டில் பணிபுரியும் பெண் பணியாளரை நாளை வேலைக்கு வர வேண்டாம் என ராமச்சந்திரன் கூறியதாக கூறப்படுகிறது. இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவர்களது வீடும் கதவு திறக்கப்படவில்லை.

இதையடுத்து ராமச்சந்திரனின் சகோதரி வழக்கம்போல் அவர்களை பார்ப்பதற்காக வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.அப்போது வீட்டில் உள்ள அறை ஒன்றில் 4 பேரும் மயக்கமாகிக் கிடப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது தொடர்பாக செல்வபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் நால்வரையும் பரிசோதித்த போது, நால்வரும் உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் நால்வரது உடல்களையும் மீட்டுள்ள காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். நால்வரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து, கடன் தொல்லை காரணமாக 4 பேரும் உயிரிழந்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பாக, காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

Similar News