சூலூரில் தடுப்பூசி தட்டுப்பாடு - பொதுமக்கள் சாலை மறியல்
கோவை மாவட்டம் சூலூரில், கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவியதால், காத்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
கோவை மாவட்டம் சூலூர் அரசு பொது மருத்துவமனையில், தினம்தோறும் 100 பேருக்கு தடுப்புசி போடப்பட்டு வருகிறது. தினமும் இப்பகுதியில் உள்ள மக்கள், தடுப்பூசி இருப்பைவிட அதிக அளவு கூடுவதால், பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி போடுவதற்காக காலை 5 மணி முதலே வரிசையில் நின்று பல மணி நேரம் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அப்படியிருந்தும் பலர் தடுப்பூசி இல்லாத காரணத்தால் தினந்தோறும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இன்று, கொரோனா தடுப்பூசி 100 மட்டுமே இருந்த நிலையில், 200க்கும் மேற்பட்டோர் சூலூர் மருத்துவமனைக்கு வந்து காத்திருந்தனர். தடுப்பூசி நூறு பேருக்கு மட்டும் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடுப்பூசிகளை அதிகளவில் மருத்துவமனைக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். காவல்துறையினர் சமாதானபப்டுத்தி, பொதுமக்களை கலைந்து போகச் செய்தனர்.