மோடி வருகையையொட்டி சூலூர் விமானப்படை தளத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு
பிரமர் மோடி வருகையையொட்டி சூலூர் விமானப்படை தளத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த சில மாதங்களாக என் மண் என் மக்கள் என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் செல்லும் இந்த யாத்திரை திருப்பூர் மாவட்டத்தில் முடிவடைய உள்ளது. வருகின்ற 27 ம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அந்த யாத்திரையின் நிறைவு விழா நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடக்கும் என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து தனி விமானம் மூலம் சூலூர் விமான படைத்தளத்திற்கு 27ம் தேதி வருகை தர உள்ளார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கு செல்லும் வகையில் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சூலூர் விமான படைத்தளத்திற்கு பிரதமர் வருகையை ஒட்டி சூலூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பிரதமரின் வருகையை ஒட்டி சூலூர் விமானப்படை தளத்தை சுற்றிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மூன்று இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் துறையினர் விமான தளத்தை சுற்றி 500 மீட்டர் அளவில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வருபவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர். அதேபோல மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.