மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மாநில செயலாளர் அனுஷா ரவி விலகல்
அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மிகுந்த மனவருத்தத்துடன் ராஜினாமா செய்கிறேன்;
கோவையை சேர்ந்த பார்க் கல்வி குழுமங்கள் உரிமையாளரும், தொழிலதிபருமான அனுஷா ரவி மக்கள் நீதி மய்யம் கட்சியில் பரப்புரை பிரிவு மாநில செயலாளராக அனுஷா ரவி இருந்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக இவர் கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த இவரது கல்லூரி நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்றார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக உடன் இணைந்துள்ள நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. அடுத்த ஆண்டு நடக்கும் மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அக்கட்சி தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கோவை தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தேர்தலில் போட்டியிடாததால் அனுஷா ரவி அதிருப்தி அடைந்துள்ளார். இதனால் அக்கட்சியில் இருந்து அனுஷா ரவி விலகியுள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “மாற்றத்திற்கான அரசியலில் கடந்த மூன்று ஆண்டுகள் தங்களுடனும் ம.நீ.ம. உறவுகளுடனும் இணைந்து பயணிக்க வாய்ப்பளித்தமைக்கும், கட்சியில் பொறுப்புகள் வழங்கியமைக்கும் நன்றி. இந்த மூன்று ஆண்டுகளில் நீங்கள் வழங்கிய பொறுப்புக்களை உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப மிகச்சிறப்பாக செயல்படுத்தி உங்கள் பாராட்டுக்களை பெற்றதில் மகிழ்ச்சி.
இருப்பினும், தேர்தல் அரசியலில் மய்யம் பங்கேற்காமல் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதினால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மிகுந்த மனவருத்தத்துடன் ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். மநீமவில் இருந்து விலகிய அனுஷா ரவி பாஜகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.