கோவை ரயில் நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்

பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய ரயில் மறியலுக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

Update: 2024-10-03 13:45 GMT

கோவை ரயில் நிலையம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சலோ 2.0 போராட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் விவசாயிகள் மேற்கொண்டனர். இதற்காக டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்ட விவசாயிகள் நீண்ட கால போராட்டத்திற்கு தேவையான பொருட்களுடன் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து டிராக்டர்களில் பேரணியாக டெல்லி நோக்கி சென்றனர்.

ஆனால் அப்படி வந்த ஏராளமான விவசாயிகளை பஞ்சாப்-அரியானா எல்லைகளில் போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளார்கள். இதனால் விவசாயிகள் அங்கேயே கூடாரங்கள் அமைத்தும், டிராக்டர்களை கூடாரமாக மாற்றியும் தங்கியிருந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளை தடுப்பதற்காக எல்லையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர் . இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டம் தூதியன்வாலி கிராமத்தில் வசிக்கும் 53 வயதான விவசாயி குர்மீத் சிங் என்பவர், கடந்த பிப்ரவரி 13ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் போராட்ட களத்தில் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

இந்த நிலையில் விவசாயி குர்மீத் சிங் தற்கொலைக்கு நியாயம் கேட்டும், போராட்டக் களத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி கோவை சோமனூர் ரயில் நிலையத்தில் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட விவசாய அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் சோமனூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனை அடுத்து விவசாயிகள் சோமனூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வரும் வட மாநில விவசாயிகளின் போராட்டத்தை கண்டுகொள்ளாத மத்திய பாஜக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும் குறைந்தபட்ச ஆதார விலை பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும், போராட்டத்தில் விவசாயிகளின் உயிரிழப்புக்கு காரணமான மத்திய இணை அமைச்சரின் மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Tags:    

Similar News