திமுக அதிமுக இடையே தான் போட்டி: எஸ்.பி. வேலுமணி பதிலடி

கோவை மக்களவை தொகுதியில் போட்டி திமுக-அதிமுக இடையேதான். பா.ஜ.கவிற்கு 4 சதவீத ஓட்டு மட்டும்தான் இருக்கிறது என கூறியுள்ளார்;

Update: 2024-03-23 12:30 GMT

அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசும் எஸ்.பி. வேலுமணி

கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, ”எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பதவியேற்ற பின்னர் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும். 3 வேட்பாளர்களும் இலட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

நமது வேட்பாளர்கள் 3 பேருக்கும் எம்ஜிஆர், ஜெயலதிதா ஆசி உள்ளது. இந்த கட்சியை‌ நிறைய பேர் அழிக்க நினைத்தாலும், அழிக்க முடியவில்லை. வெற்றி பெறுவது நாம் தான். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். மற்ற வேட்பாளர்கள் எல்லாம் தூசு. அதிமுக பக்கத்தில் கூட வர முடியாது. சோசியல் மீடியாவில் போட்டு கொண்டிருந்தால், பெரிய ஆளாக முடியாது. அதிமுக வலுவான கட்சி. அதிமுக வெற்றி பெறுவது உறுதி.

கணபதி ராஜ்குமார் யார்? அம்மா அவருக்கு மேயர், மாவட்ட செயலாளராக வாய்ப்பு தந்தார். இந்த கட்சிக்கு துரோகம் செய்து விட்டு திமுகவில் இணைந்து விட்டார். திமுகவில் ஆளே இல்லையா?. திமுகவில் வேட்பாளராக தகுதி யாருக்கும் இல்லை.

திமுக அதிமுக இடையே போட்டி தான். ஆனால் திமுக வேட்பாளர் டம்மி. கரூரில் நிற்காமல் அண்ணாமலை கோவையில் நிற்கிறார். பாஜகவிற்கு 4 சதவீத ஓட்டு உள்ளது. கூட்டணியில் உள்ள பாமக, தமாகா கட்சிகளுக்கு ஓட்டு உள்ளதா? அவர்கள் பயங்கரமாக வேலை செய்து 10 சதவீத ஓட்டு வாங்கினால் ஜெயிக்க முடியுமா? அதிமுக உலகத்தில் 7 வது பெரிய கட்சி. இந்தியாவில் பெரிய கட்சி. 34 சதவீத வாக்குகள் உள்ள கட்சி. அப்புறம் தான் திமுக எல்லாம். பாமக, பாஜக கட்சிகள் அதிமுக உடன் கூட்டணி வைத்து தான் வளர்ந்தார்கள். அதிமுக தொண்டர்கள் தர்மப்படி, நியாயப்படி நடப்பார்கள். கருத்து கணிப்பு என கருத்து திணிப்பு செய்கிறார்கள். அதிமுகவை விட பாஜக அதிக இடங்களை பெறும் என்ற பிம்பத்தை உருவாக்க பார்க்கிறார்கள். அது எல்லாம் நடக்காது.

3 வருட திமுக ஆட்சியும், 10 ஆண்டு கால பாஜக ஆட்சியும் கோவைக்கு என்ன செய்தது? கோவைக்கு அதிக திட்டங்கள் தந்தது அதிமுக தான். மக்களுக்கு எதுவும் செய்யாமல் எப்படி ஓட்டு கேட்க வர முடியும்? நமக்கு மட்டுமே காலரை தூக்கிவிட்டு ஓட்டு கேட்டுச் செல்ல தகுதி உள்ளது. மற்றவர்களுக்கு ஓட்டு கேட்டு வர தகுதியே இல்லை.

திமுகவினரே திமுகவிற்கு ஓட்டு போட தயாராக இல்லை. அதிமுக வெற்றி உறுதி. ஆனாலும் எதிரியை குறைவாக மதிப்பிட்டு விடக்கூடாது. கூட்டணி கட்சியினரை அரவணைத்து செல்ல வேண்டும். நமக்கு எதிரி திமுக தான். மற்றவர்கள் எல்லாம் மூன்றாவது தான். நிறைய கட்சிகள் நம்மிடம் பேசிக்கொண்டே துரோகம் செய்துவிட்டு சென்றுள்ளார்கள். அவர்களுக்கு நாம் யார் என காட்ட வேண்டும். கட்சிக்கு விசுவாசமாக இருந்து வேலை செய்ய வேண்டும். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளரான பின்னர் நடக்கும் முதல் தேர்தல் இது. இரட்டை இலையை காப்பாற்ற வேண்டும். திமுக, பாஜக வேட்பாளர்கள் அதிமுக வேட்பாளர்களுக்கு இணை இல்லை” எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News