சூலூர் அருகே சிறுமியை கடித்த நாயின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
கோவை சூலூர் அருகே சிறுமியை கடித்த நாயின் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகன் குமார் என்பவரது மகள் அக்ஷயா கீர்த்தி. 5ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி அக்ஷயா கீர்த்தி, சம்பவத்தன்று மாலை அவரது வீட்டின் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் கட்டப்படாமல் இருந்த வளர்ப்பு நாய் ஆக்ரோஷமாக குரைத்தபடி சிறுமியை நோக்கி ஓடி வந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமி நாயிடமிருந்து தப்பித்துக் கொள்ள தப்பி ஓடியுள்ளார். சிறுமி தவறி கீழே விழுந்து விட, அவர் மீது பாய்ந்த நாய் கழுத்து, தோள்பட்டை காது என 5க்கும் மேற்பட்ட இடங்களில் கடித்து குதறியது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், சிறுமியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கோவை அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது தொடர்பாக சிறுமியின் தந்தை மோகன் குமார் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் நாயின் உரிமையாளர் தனபால் என்பவர் மீது காவல் துறையினர் விலங்குகளால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தி கொடுங்காயம் விளைவித்தல் (289), கவனக்குறைவாக அசட்டு துணிச்சலுடன் மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல் (337) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.