தங்கக் கட்டிகளை வாங்கி நூதன முறையில் மோசடி; 4 பேர் கைது
Coimbatore News- தங்கக் கட்டிகளை வாங்கி நூதன முறையில் மோசடி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;
Coimbatore News, Coimbatore News Today- தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டையில் ஹரிசங்கர் என்பவர் நகை வியாபாரம் செய்து வருகிறார். சந்திரசேகர் என்பவர் தொலைபேசி மூலம் ஹரிசங்கரை தொடர்பு கொண்டு தன்னிடம் அதிக பணம் இருப்பதாகவும், உங்களிடம் தங்க கட்டிகள் இருந்தால் தாருங்கள் நான் பணமாக தருகிறேன் என்றும் கூறியுள்ளார். மேலும் கடந்த 11ம் தேதி அன்று 1 கிலோ தங்க கட்டிகளுடன் சூலூரில் உள்ள பாப்பம்பட்டி பிரிவிற்கு வாருங்கள் என்று சந்திரசேகர் கூறியுள்ளார். இதன் பேரில் ஹரிசங்கர் ஒரு கிலோ தங்க கட்டிகளுடன் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்.
அப்போது ஹரிசங்கரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட சந்திரசேகர், தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் தன்னுடைய மேனேஜர் ராஜ்குமார் என்பவரை அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார். பின்னர் ராஜ்குமார் ஹரிசங்கரிடம் இருந்து ஒரு கிலோ தங்க கட்டிகளை வாங்கிய பிறகு, தனது வாகனம் பழுதாகி விட்டதாகவும், அதனை சரி செய்துவிட்டு பின்னால் வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் லட்சுமி மில் பகுதியில் இறங்கிய பிறகு தன்னை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளார்.
இதன்படி ஹரிசங்கர் லட்சுமி மில் பகுதிக்கு வந்த பிறகு ராஜ்குமாரை தொடர்பு கொண்ட போது, அவருடைய மொபைல் சுவிட்ச் ஆஃப் ஆகியுள்ளது. இதனால் ஹரிசங்கர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரில் பேரில் தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. சிசிடிவி காட்சிகள் மற்றும் சைபர் கிரைம் காவல் துறையினர் உதவியுடனும் புலன் விசாரணை செய்ததில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பாபு (53), நவீன் குமார் (25), பிரபு (25) மற்றும் இளஞ்சிறார் ஒருவர் ஆகியோர் திட்டமிட்ட் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த காவல் துறையினர், 1 கிலோ தங்கக் கட்டியையும் பறிமுதல் செய்தனர்.