13வது உலக வானொலி தினம் : 13 மணி நேரம் சமுதாய வானொலியில் மாணவர்கள் நேரலை..!
பிப்ரவரி 13 ஆம் தேதி உலக வானொலி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆண்டு தோறும் பிப்ரவரி 13 ஆம் தேதி உலக வானொலி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், முடிவெடுப்பவர்களை வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் உள்ளிட்டவை அதிகரித்து உள்ள இந்த காலத்திலும் வானொலி கேட்கவும், ஒரு கணிசமான மக்கள் கூட்டம் உள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களை வானொலிகளை போலவே, சமுதாய வானொலிகளும் மக்களிடம் நீங்கா இடம் பெற்றுள்ளன. விளம்பரம், சினிமா, செய்திகள் இல்லாத இந்த சமுதாய வானொலிகள் சமுதாயம் பயன்பெற வேண்டுமென்ற நோக்கத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி. கல்லூரியில் இருந்து பி.எஸ்.ஜி. சமுதாய வானொலி இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 2007 ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த வானொலி, காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் 10 மணி வரையும் ஒலிபரப்பு செய்து வருகிறது.
பொழுதுபோக்கு அம்சங்கள் இன்றி, சமுதாயம் சார்ந்த தகவல்கள், மக்கள் பயன்பெறும் வகையிலான விபரங்கள், விழிப்புணர்வு தகவல்கள் உள்ளிட்டவை ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. இந்த வானொலியை அப்பகுதியை சுற்றி 10 கி.மீ. தொலைவிற்குள் உள்ள மக்கள் கேட்க முடியும். இன்று உலக வானொலி தினத்தை முன்னிட்டு இன்று 13 மணி நேரம் தொடர் நேரலை நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து பி.எஸ்.ஜி. சமுதாய வானொலி நிலையத்தின் இயக்குநர் சந்திரசேகரன் கூறுகையில், “இந்த சமுதாய வானொலி 2007ம் ஆண்டு துவக்கப்பட்டது. 16 ஆண்டுகளை கடந்து மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இயங்கி வருகிறது. 8 வயது முதல் 80 வயது வரை அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த வானொலி இயங்கி வருகிறது.
ரேடியோ ஹப் என்ற பெயரில், இக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சமுதாய வானொலியில் பங்களிப்பு செய்ய வைத்து வருகிறோம். நாங்கள் நடத்திய ஆய்வில் 24.4 % பேர் இந்த வானொலியை கேட்கின்றனர் என்பது தெரியவந்தது. யார் ரேடியோ கேட்கிறார்கள்? என்ற நிலை மாறி அனைத்து இடங்களில் ரேடியோ கேட்கும் நிலை உள்ளது. ஏராளமானோர் வானொலியை கேட்டு வருகின்றனர்” எனத் தெரிவித்தனர்.
இது குறித்து மாணவர்கள் கூறுகையில், ”பி.எஸ்.ஜி. சமுதாய வானொலியில் 108 மணி நேரம் 108 பேர் நேரலை செய்தது போன்ற சாதனைகளை தொடர்ந்து செய்து வருகிறோம். இன்று 13 வது வானொலி தினத்தை முன்னிட்டு காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை 13 மணி நேரம் நேரலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இந்த வானொலி மாணவர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் ஆர்.ஜெ. ஆகும் ஆசை உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தனர்.