கொரோனா சிகிச்சை வசதிகளை அதிகரிப்போம்: அமைச்சர் சக்கரபாணி

- உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேட்டி;

Update: 2021-05-13 10:15 GMT

"ரெம்டெசிவிர் வாங்க கூட்டம் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்" 

கோவை ஆவராம்பாளையம் சாலையில் உள்ள கோயமுத்தூர் தொழில்துறை கட்டமைப்பு சங்கத்தின் கூட்டரங்கில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன், கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். அப்போது ஆளுங்கட்சி அமைச்சர்களும், எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர். முன்வரிசையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு இடம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், "எதிர்கட்சி, ஆளுங்கட்சி என்று இல்லாமல் அனைவரும் ஒன்றுபட்டு கொரோனா பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இப்பிரச்சனைக்கு தீர்வு காண எதிர்கட்சியினர் ஆலோசனைகள் வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, "கொரோனா இரண்டாவது அலை கொடூரமாக உள்ளது. இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், தொழில் துறையினர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஆக்சிஜன் கூடுதலாக பெற மத்திய அரசிடம் முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் கோவைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரேசன் அட்டைதாரர்களுக்கு வருகின்ற 15 ம் தேதி முதல் கொரோனா நிவாரணம் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பற்றது. அனைவரும் ஒன்றிணைந்து மக்களை பாதுகாக்க வேண்டும். கொரோனாவை எநிர்கொள்ள தமிழ்நாடு அரசு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரெம்டெசிவிர் மருந்து வாங்க கூட்டம் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசுடன் பேசி ரெம்டெசிவிர் அதிகரிக்கப்படும். சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட முதலீட்டு மானியம் 250 கோடியில், 168 கோடி ரூபாய் உடனடியாக விடுவிக்கப்படும். ஆக்சிஜன், படுக்கை, தடுப்பூசி உள்ளிட்ட வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News