முக்தியடைந்தார் கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள்

கோவை இருகூர் பகுதியில் உள்ள காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் இன்று காலை உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.;

Update: 2024-03-12 08:35 GMT

முக்தியடைந்த சிவலிங்கேஸ்வர சுவாமிகள்.

கோவை இருகூர் பகுதியில் உள்ள காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் இன்று காலை உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் முக்தி அடைந்தார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். சிறு வயதிலேயே ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு, கோவையில் காமாட்சிபுரி ஆதீனத்தை உருவாக்கியவர். காமாட்சிபுரி ஆதினத்தின் மூலம் ஆன்மிகப் பணிகளோடு, தேசியப் பணிகளிலும், சமுக சேவையிலும் ஈடுபட்டு வந்தவர். அனைவருக்கும் ஆன்மிக அருளை வாரி வழங்கியவர். எளிமையின் இலக்கணமாய் இருந்து, அனைவரும் அணுகுவதற்கு எளிதாக திகழ்ந்தவர். தேசியம் தழைக்க ஆன்மிகமும், ஆன்மிகம் தழைக்க தேசியமும் தேவை என்பதை உணர்ந்தவர். அதனால்தான், ஆர்.எஸ்.எஸ்., பாஜக போன்ற தேசிய சக்திகளுக்கு எப்போதும் ஊக்கமளித்து வந்தார்.

கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் நூற்றுக்கணக்கான திருக்கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி வைத்துள்ளார். ஆதரவற்ற குழந்தைகளுக்கான அன்பு இல்லங்களை நடத்தி வந்தார். இந்து சமுதாயத்திற்கு பிரச்சனைகள் வரும்போது எதைப் பற்றியும் கவலைப்படாமல், நேரடியாக களத்தில் இறங்கிப் போராடவும் தயங்காதவர். போராட்டக் களத்தில் பலமுறை அவரது துணிவைக் கண்டு வியந்திருக்கிறேன்.

தனிப்பட்ட முறையில் என்றும் எனக்கென பிரத்யேக அன்பும் ஆதரவும் அளித்து, ஒவ்வொரு தேர்தலிலும் உறுதுணையாக நின்று ஆதரவு அளித்தவர். இன்னும் நீண்ட காலம் வாழ்ந்து தேசியத்திற்கும், தெய்வீகத்திற்கும் தொண்டாற்றுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், சுவாமிகளின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவரது மறைவு எனக்கு மட்டுமன்றி ஆன்மிக உலகிற்கும், தேசிய சக்திகளுக்கும் பேரிழப்பு. அவரது மறைவால் வாடும் பக்தர்கள், காமாட்சிபுரி ஆதீனத்தைச் சேர்ந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சுவாமிகளின் ஆத்மா இறைவனின் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News