கோவை தொகுதியில் அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் போட்டி
கோவை தொகுதியில் அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவராக உள்ள சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார்.;
அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளரும், கடந்த 1991 முதல் 1996 வரை சிங்காநல்லூர் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவருமான சிங்கை கோவிந்தராசுவின் மகன் சிங்கை ராமச்சந்திரன். 1987 ம் ஆண்டு பிறந்த இவருக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் இவருக்கு ராமச்சந்திரன் எனப் பெயர் வைத்துள்ளார்.
கோயம்புத்தூரில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் ஐஐஎம் அகமதாபாத்தில் எம்.பி.ஏ. படித்தார். அப்போது மாணவர் சங்கத் தலைவராகவும் அவர் இருந்துள்ளார். மார்ச் 2016 இல் அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக ராமச்சந்திரனை அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா நியமித்தார். அவர் தற்போதைய தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவராக உள்ளார். வரதராஜபுரம் பகுதியில், கடந்த 10 ஆண்டுகளாக இலவசமாக இ சேவை மையம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் சிங்கை ராமச்சந்திரனுக்கு முதல் முறையாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக அப்புச்சாமி(எ)கார்த்திகேயன் அறிவிக்கப்பட்டுள்ளார். பொள்ளாச்சி வட்டம் திவான்சா புதூரைச் சேர்ந்த எம்.அப்புச்சாமி கவுண்டர் மகன் கார்த்திகேயன் (45). குமரகுரு கல்லூரியில் பிடெக் (டெக்ஸ்டைல்ஸ்), சிடிசிஎஸ், சிஐடிஎப் (வங்கித் தேர்வு). விவசாய குடும்பத்தில் பிறந்த இவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கும் உள்ளது. லண்டன் ஐசிஐசிஐ வங்கி மற்றும் லாயிட்ஸ் வங்கி (பர்மிங்காம்) என வெளிநாட்டில் பணி புரிந்துள்ளார்.
இவரது தந்தை எம்.அப்புச்சாமி ஆனைமலை ஒருங்கிணைந்த ஒன்றிய செயலாளராகவும், மாசாணி அம்மன் திருக்கோவிலில் அறங்கா வலர் குழு தலைவராகவும் இருந்துள்ளார். இவரது மனைவி சாந்தி தற்போது ஆனைமலை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக உள்ளார். இவரது மகன் விஸ்ரத்(12) மகள் மதுநிகா(10) ஆகியோர் பள்ளியில் படித்து வருகின்றனர்.