கோவையில் ரெம்டெசிவிர் விற்பனை நிறுத்தம்
கோவையில் ரெம்டெசிவிர் விற்பனை நிறுத்தம் - நோயாளிகளின் உறவினர்கள் சாலை மறியல்
கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் ரெம்டெசிவிர் மருந்துகள் விற்பனை, கோவையில் கடந்த 8 ம் தேதி துவங்கியது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவிர் விற்பனை மையம் அமைக்கப்பட்டு இருந்தது. ரெம்டெசிவிர் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வந்தது. காலை 10 மணிக்கு மருந்து விநியோகம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், அதிகாலை 6 மணி முதல் பொதுமக்கள் மருந்து வாங்க குவிந்து வந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்து வாங்கிச் சென்றனர். இதனிடையே கடந்த 10 ம் தேதி அன்று ஒரே நாளில் 15 ம் தேதி வரையிலான ஒரு வாரத்திற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன.
ரெம்டெசிவிர் விற்பனை துவங்கியதில் இருந்து நாள் ஒன்றுக்கு 500 குப்பிகள் வீதம் 7 நாட்கள் விநியோகிக்கப்பட்டது. நேற்று மருந்து விற்பனைக்கு விடுமுறை என்றாலும், இன்று முதல் ரெம்டெசிவிர் வழங்குவதற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன.
இதனிடையே ரெம்டெசிவிர் வாங்க வருபவர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், மருந்து தேவைப்படும் நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு நேற்று அறிவித்தது. இதையடுத்து இன்று முதல் கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு மருத்துவக் கல்லூரி முன்பு ஒட்டப்பட்டுள்ளது.
இதனையறியாது நேற்று டோக்கன் பெற்ற பலர் இன்று, ரெம்டெசிவிர் வாங்க வந்தனர். ரெம்டெசிவிர் விற்பனை நிறுத்தப்பட்டு இருந்ததை அறிந்து ஏமாற்றமடைந்தனர். மேலும் டோக்கன் பெற்றவர்களுக்கு ரெம்டெசிவிர் வழங்க கோரி, அரசு மருத்துவக் கல்லூரி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பீளமேடு காவல் துறையினர் நோயாளிகளுக்கு தேவையான ரெம்டெசிவிர் மருந்து மருத்துவமனைகளுக்கே நேரடியாக வழங்கப்படும் என சமரசப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லச் செய்தனர்.
#ரெம்டெசிவிர் #கொரோனா #நோயாளி #Instanews #Tamilnadu #Coimbatore #Remdesivir #Sales #Protest #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #கோயம்புத்தூர் #சாலைமறியல் #salesstopped #stopped #coronavirusoutbreak #GetVaccinated #covidvaccine