ரவுடி மீது போலீஸ் துப்பாக்கிசூடு: கோவையில் பரபரப்பு
காவலர்களை தாக்க முயற்சித்தபடி தப்பி ஓட முயன்ற போது கை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.;
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள வாத்தியார் வில்லை பகுதியைச் சேர்ந்தவர் ஆல்வின். 40 வயதான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் மீது கோவை பந்தய சாலை காவல் நிலையத்திலும் வழக்குகள் உள்ளன. இந்த வழக்கு தொடர்பாக ஆல்வின் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை கொடிசியா மைதானத்தில் ஆல்வின் இருப்பதாக பந்தய சாலை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படையினர், தலைமை காவலர் சந்திரசேகர், தலைமை காவலர் ராஜ்குமார், தலைமை காவலர் சசி ஆகியோர் ஆல்வினை பிடிக்கச் சென்றுள்ளனர். தனிப்படை காவல் துறையினர் ஆல்வினை பிடிக்க முயற்சித்த போது, ஆல்வின் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் தலைமை காவலர் ராஜ்குமார் (42) என்பவரின் இடது மணிக்கட்டுப் பகுதியில் வெட்டுக்காயம் ஏற்பட்டதாகவும், மற்ற காவலர்களை தாக்க முயற்சித்தபடி தப்பி ஓட முயன்ற போது உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தற்காப்பிற்காக தான் வைத்திருந்த கை துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆல்வினின் இரண்டு கால் முட்டிகளிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.
இதையடுத்து இருவரையும் மீட்ட காவல் துறையினர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரவுடி மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.