சிங்காநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ மீது கோவை மாநகர போலீசில் நில மோசடி புகார்
சிங்காநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ மீது கோவை மாநகர போலீசில் நில மோசடி புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரே குடும்ப வாரிசுதார்களான 30க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு சொந்தமான பூர்வீக சொத்தை, சிங்காநல்லூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ஜெயராம் அவரது உறவினர் மற்றும் தனியார் நபர் ஆகியோர் மோசடி செய்துள்ளதாகவும், நீதிமன்றத்தில் இது சம்பந்தமாக வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தொடர்ந்து விற்பனை செய்து வருவதாகவும் புகார் அளித்தனர். மேலும் இந்த விவகாரத்தை மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரி மனு அளித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காளிக்கோனாரின் வாரிசுதாரர்களுக்கு சொந்தமான பல கோடி மதிப்பிலான நிலத்தை உயிருடன் இல்லாதவர்களை, உயிருடன் இருந்தது போன்று மோசடி செய்து நிலத்தை அபகரித்து விட்டதாகவும் இது தொடர்பான வழக்கு மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் கூறினர்.
இந்த நிலையில் ஸ்ரீ சக்தி கார்டன் என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி வீட்டு மனைகளை விற்பனை செய்து வருவதாகவும், அதை தடுத்து நிறுத்துவதற்காக பொதுமக்களிடம் இந்த தகவலை தெரிவிப்பதற்கும் மோசடியாக வீட்டுமனைகளை விற்பனை செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதுகுறித்து ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்திட இருப்பதாகவும், அதற்கு அனுமதியும் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என கேட்டு கொண்டனர்.
சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் மற்றும் அவருடைய உறவினர் மணிகண்டன் இவர்களுடன் சேர்ந்து ஸ்ரீவாரி ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தான் தங்களுடைய சொத்துக்களை திட்டமிட்டு மோசடி செய்துள்ளதாக கூறிய அவர்கள், இதுகுறித்து புகார் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை எனத் தெரிவித்தனர். மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் எப்படி இவர்கள் சொத்துகளை விற்பனை செய்யலாம் என கேள்வி எழுப்பிய அவர்கள், தங்களை அவர்கள் மிரட்டுவதாகவும், தங்கள் உயிருக்கு ஏதேனும் நிகழ்ந்தால் அவர்கள் மூவரும் தான் பொறுப்பு என்றனர்.