ஈஷா ஹோம் பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!

யோகா பயிற்சிக்காக சென்ற இடத்தில் மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-06-22 12:30 GMT

பீளமேடு காவல் நிலையம்

சர்வதேச யோகா தினம் நேற்று கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பீளமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடைபெறும் யோகா நிகழ்வில் பங்கேற்பதற்காக, ஈசா யோகா மையம் நடத்தி வரும் ஈஷா ஹோம் ஸ்கூலில் இருந்து 6 மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தனர்.

தனியார் பள்ளியில் யோகா நிகழ்ச்சி முடிந்த பிறகு, சவுரிபாளையம் ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் ஈஷா மையம் வாடகைக்கு எடுத்துள்ள மையத்திற்கு ஓய்விற்காக சென்றனர். அங்கு கழிவறையில் எதிர்பாராத விதமாக தண்ணீர் பைப்பில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் ஆந்திராவை சேர்ந்த மாணவர் மோக்சனா என்பவர் தூக்கி வீசப்பட்டார்.

உடனடியாக இந்த மாணவரை சக மாணவர்கள் அருகில் இருந்த பிஎஸ்ஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கிச்  சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து மாணவரின்  உடல் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மாணவரின் பெற்றோர்கள் ஆந்திராவில் இருந்து வந்து கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யோகா பயிற்சிக்காக சென்ற இடத்தில் மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News