கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; சோதனையால் பரபரப்பு

பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.

Update: 2024-10-16 06:30 GMT

கோவை விமான நிலையம்

கோவையில் கடந்த சில நாட்களாக பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் இந்த மிரட்டல்கள் புரளி எனத் தெரிய வந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று இரவு 10:30 மணிக்கு இமெயில் மூலம் விமான நிலைய முனைய மேலாளருக்கு ஒரு தகவல் வந்தது. அதில் விமான நிலையத்தில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து விமான நிலையம் முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையினர் குழுவினர் மெட்டல் டிடெக்டர் மற்றும் துப்பறியும் நாய் மூலம் தீவிர சோதனை நடத்தினார்கள். நள்ளிரவு 12 மணி வரை இந்த சோதனை நடத்தப்பட்டது. பின்னர் இது வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இது குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது. இதன் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News