ஏழை எளிய மக்களுக்கு அரணாக விளங்கும் கட்சி அதிமுக : அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பேச்சு
Coimbatore News- அதிமுக எப்பொழுதும் ஏழை எளிய மக்களுக்கு அரணாக விளங்கக்கூடிய கட்சி என வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பேசினார்.;
Coimbatore News, Coimbatore News Today- கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காந்திபுரம், ஜிபி சிக்னல், சித்தாபுதூர், பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சிங்கை ராமச்சந்திரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது வாகனப் பிரச்சாரம் மூலமாகவும், வீடு வீடாக மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்கியும் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் அதிமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளரும், கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ஜுனன், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர் ஜெயராம் மற்றும் முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுச்சாமி உட்பட அதிமுக முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் அதிமுக எப்பொழுதும் ஏழை எளிய மக்களுக்கு அரணாக விளங்கக்கூடிய கட்சி எனத் தெரிவித்தார். கடந்த கொரோனா காலங்களில் எந்த வித சாதி மத பாகுபாடு இன்றி, அனைவருக்கும் வீடு வீடாக அத்யாவசிய பொருட்கள் அனைத்தையும் கொண்டு சேர்த்தது அதிமுக மட்டுமே எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது ஒரு முழு மனித வளர்ச்சியை போன்று இருக்க வேண்டும் என்றும், ஏழை எளிய மக்களுக்காக என்றும் உறுதுணையாக இருப்போம் என்றும் அவர் தெரிவித்தார். இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து தன்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.