டிமாண்டி காலனி பாகம் 2 படம் குறித்து நடிகர் அருள்நிதி பேட்டி
அனைத்து தொழில்நுட்ப விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, முதல் பாகத்தை தழுவி இந்த இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது.;
திரைப்பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர்கள் அருள்நிதி, அருண் பாண்டியன், நடிகைகள் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் டிமாண்டி காலனி பாகம் 2 திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன் முதல் பாகம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. ரசிகர்கள் பலரின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் திரைப்பட குழு பிரமோசன் வேலைகளில் செய்து வருகின்றனர். ஹாரர் படமாக வெளியான இதன் முதல்பாகம் சிறிய பொருட்செலவில் எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது. தற்போது இரண்டாம் பாகம் வி.எப்.எக்ஸ், பின்னணி ஒலிஎன அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இப்படக்குழுவினர்களான நடிகர்கள் அருள்நிதி, அருண்பாண்டியன், முத்துகுமார், நடிகைகள் பிரியா பவானி சங்கர், அர்ச்சனா இயக்குநர் அஜர் ஞானமுத்து, தயாரிப்பாளர் தொழில்நுட்ப கலைஞர் ஆகியோர் கோவை ஹோப்ஸ் பகுதியில் உள்ள டைடல் பார்க் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள் இந்த திரைப்படம் அனைத்து தொழில்நுட்ப விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருப்பதாகவும், முதல் பாகத்தை தழுவி இந்த இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டிருப்பதாககூறினர். வழக்கமாக பேய் படங்களை போல் அல்லாமல் புதுவித அனுபவத்தை கொடுக்கும் எனவும் திரையரங்குகளுக்கு சென்று பார்த்தால் அந்த அனுபவத்தை உணர முடியும் எனவும் தெரிவித்தனர்.
மேலும் இப்படத்தின் இசையமைப்பாளர் சியாம்.சி.எஸ் சிறந்த பின்னணி இசையை கொடுத்து திகில் அனுபவத்தை தந்திருப்பதாக கூறினர். மேலும் வி.எப்.எக்ஸ் தொழில்நுட்பம் இப்படத்தில் முக்கிய பங்காற்றி இருப்பதாகவும், வி.எப்.எக்ஸ் நன்றாக வருவதற்கு தான் நாட்கள் அதிகம் எடுத்து கொண்டதாக தெரிவித்தனர். அதே நாளில் இதர படங்களும் வெளியாவது குறித்தான கேள்விக்கு பதிலளித்த நடிகர் அருள்நிதி, வேண்டுமென்றே அந்த நாளில் இந்த படத்தை வெளியிடவில்லை எனவும், அந்நாளில் வெளியாகும் அனைத்து படங்களுமே வெற்றி பெற வேண்டுமெனவும் அரசியல் குறித்தான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அருள்நிதி - தற்போது அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை எனவும் 2062ல் அது குறித்து யோசிக்கலாம் எனவும் அப்போது நானும் உயிருடன் இருக்கமாட்டேன் நீங்களும் இருக்க மாட்டீர்கள் என சிரித்தபடிய பதிலளித்து விட்டு சென்றார்.