பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
Coimbatore News- மைவி 3 ஏட்ஸ் நிறுவனம் மீது, புகார்களை நிறுத்த வேண்டுமென கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
Coimbatore News, Coimbatore News Today- மைவி 3 ஏட்ஸ் நிறுவனம் விளம்பரம் பார்ப்பதன் மூலம் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசை காட்டி மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாகவும், காவல் துறையினர் அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தொடர்ந்து பாமக கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி புகார் அளித்து வருகிறார்.
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி யை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட கண்ணன் என்ற நபர் மைவி 3 ஏட்ஸ் நிறுவனம் மீது நீங்கள் அளிக்கும் புகார்களை நிறுத்த வேண்டுமென கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான செல்போன் உரையாடல் பதிவு ஒன்றும் வெளியானது. இந்த கொலை மிரட்டலுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து கொலை மிரட்டல் விடுத்த நபர், நிறுவனம் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து அசோக் ஸ்ரீநிதி மீது கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் கோவை மாவட்ட நிர்வாகிகள் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் பாமக மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீ நிதி பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் மைவி 3 ஏட்ஸ் உரிமையாளர் சத்தி ஆனந்த், விஜய ராகவன் மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஆகிய 3 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.