மது குடிக்க பணம் கேட்டு தொல்லை - அண்ணனை கொன்ற தம்பி கைது
பொள்ளாச்சி அருகே, மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த அண்ணனை கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.;
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பத்திரகாளி அம்மன் கோவில், நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது தம்பி கிருஷ்ணமூர்த்தி. குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இருவரும் பெயிண்டிங் வேலைக்குச் சென்று வருகின்றனர். நேற்று ஆறுமுகம் தனது தம்பி கிருஷ்ணமூர்த்தியிடம் மது குடிக்க பணம் கேட்டு சண்டையிட்டு உள்ளார்.
இதனால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த கிருஷ்ணமூர்த்தி, கத்தியால் தனது அண்ணன் ஆறுமுகத்தை குத்தி உள்ளார். அருகில் இருந்தவர்கள், கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில், கத்தியால் குத்தப்பட்ட ஆறுமுகத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு, போலீசார் அனுப்பி உள்ளனர்.
பின்னர், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த ஆறுமுகம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக, கிருஷ்ணமூர்த்தியை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.