நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு; போலீசார் எச்சரிக்கை

Coimbatore News, Coimbatore News Today-பொள்ளாச்சி, நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேட்டில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, போலீஸ் டிஎஸ்பி எச்சரித்துள்ளார்.;

Update: 2023-03-11 14:06 GMT

Coimbatore News, Coimbatore News Today- நெல் கொள்முதல் நிலையத்தில், முறைகேடு நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரித்துள்ளனர். (கோப்பு படம்)

Coimbatore News, Coimbatore News Today - ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில் நெல் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஆனைமலை, கோட்டூரில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. அருண் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் எதுவும் நடக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து கோவை மண்டல போலீஸ் எஸ்.பி பாலாஜி ஆலோசனையின் பேரில் பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் உள்ள போலீஸ் திருமண மண்டபத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தடுக்க அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

குடிமைப் பொருள் குற்ற புலனாய்வுத்துறை கூடுதல் டி.ஜி.பி. அருண் பொறுப்பேற்ற பிறகு, பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது சம்பா, தாளடி நெல் பயிர்கள் அறுவடை நடந்து வருகிறது. இதனால் விவசாயிகளிடம் இருந்து நெல்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளை நீண்ட நேரம் காக்க வைக்க கூடாது. கையூட்டு, முறைகேடு போன்றவை கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், துணை வேளாண்மை அலுவலர் இளங்கோவன், வட்ட வழங்கல் அலுவலர் காயத்ரி, ஆனைமலை பட்டியில் எழுத்தர் நெடுஞ்செழியன் மற்றும் சுற்று வட்டார விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் ''நேரடி நெல் கொள்முதலில் எந்தவித தவறும் நடைபெறக் கூடாது என்பதில் அரசு கவனமாகவும் உறுதியாகவும் உள்ளது. கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் ஒரு பைசா வாங்கினாலும் அரசு பொறுத்துக் கொள்ளாது. தவறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் ஆர். சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்ச ஆதரவு விலையில், விவசாயிகளிடம் இருந்து அரசாங்கமே நேரடியாக நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நேரடி நெல் கொள்முதலுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள விலை வெளிச்சந்தை விலையைவிட ஆதாயமாக இருப்பதால் விவசாயிகள் இங்கே விற்க விரும்புகிறார்கள். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்(டி.என்.சி.எஸ்.சி) தனது நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் இந்த கொள்முதலை மேற்கொள்கிறது.

கொள்முதல் நிலையம் 33 சென்ட் பரப்பளவில் 100 மெட்ரிக் டன் சேமிப்பு வசதி, உலர்த்தும் தளம், வின்னோவிங் மெஷின் (பதர் தூற்றும் இயந்திரம்), மின்னணு எடை அளவீடு மற்றும் ஈரப்பத மானி, ஆகியவற்றோடு செயல்படும். மொத்தம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில், பெரும்பான்மையானவை டெல்டா மாவட்டங்களில் உள்ளன. ஒவ்வொரு பருவத்திற்கும் தேவைக்கும் ஏற்ப கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன.

குறுவை சாகுபடியில் அறுவடையாகும் நெல் அக்டோபர்- நவம்பர் மாதங்களிலும், சம்பா பட்டத்தில் அறுவடையாகும் நெல் ஜனவரி-மார்ச் மாதங்களிலும் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் வாங்கப்படுகின்றன. நெல் உற்பத்தி அளவைப் பொறுத்து டெல்டா தவிர பிற மாவட்டங்களில் நேரடி கொள்முதல் மையங்கள் அமைக்க, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News