கோவை அருகே நரிக்குறவர்களுக்கு வீடு கட்ட கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
7 ஆண்டுகளுக்கு பின் இவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க கணக்கெடுக்கும் பணி நடந்தது.;
கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே கிராமத்தில் வசித்து வரும் நரிக்குறவரின மக்களுக்கு வீடு கட்டுத்தருவதற்காக ஊராட்சி சார்பில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் மருதூர் ஊராட்சி உள்ளது. இங்கு 15 வார்டுகள் உள்ளது. இதில் நரிக்குறவர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு 9-வது வார்டு சிவன்புரம் பகுதியில் 64 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. இதில் 54 பேர் நரிக்குறவர்கள். அப்போது திம்மம்பாளையம்புதூர் பகுதியில் இருந்து சிவன்புரம் கிராமத்திற்கு குடியேறினர். ஆனால் இப்பகுதியில் சாலை, தெருவிளக்கு, நடைபாதை, குடியிருப்புகள் இல்லாமல் கொட்டகை அமைத்து தங்கி இருந்தனர்.
இதனிடையே ஊராட்சி தலைவர் பூர்ணிமா அறிவுரங்கராஜ் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் காட்டிக்கொடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தார். இவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து 7 ஆண்டுகளுக்கு பின் இவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதற்காக கணக்கெடுக்கும் பணி ஊராட்சி தலைவர் பூர்ணிமாஅறிவுரங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. இவருடன ஊராட்சி செயலாளர் லட்சுமணன், துணைத்தலைவர் தேன்மொழி மற்றும் வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்ட நரிக்குறவர், குருவிக்காரர் இன மக்கள்:
தமிழ்நாட்டில் நரிக்குறவன், குருவிக்காரன் சமூகம் என்று அழைக்கப்படும் நாடோடி பழங்குடியினரை தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி கவனத்தை ஈர்த்து, முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 19-3-2022 அன்று கடிதம் எழுதியிருந்தார். அதில், தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளின் அடிப்படையில், குருவிக்காரன் குழுவினருடன் இணைந்த நரிக்குறவன் சமூகத்தினரை, தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் திட்டத்திற்கு இந்திய தலைமைப் பதிவாளர் ஒப்புக் கொண்டுள்ளதாக, ஒன்றியப் பழங்குடியினர் விவகாரங்கள் துறையின் இயக்குநர் மத்திய அரசின் கடிதத்தின் மூலம், பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகவும்.
மேலும், லோகூர் வல்லுநர் குழு 1965 -ம் ஆண்டிலும், நாடாளுமன்றக் கூட்டுக் குழு 1967-ம் ஆண்டிலும், இந்த சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பரிந்துரைத்தன என்றும், நரிக்குறவர்கள் மிகவும் பின்தங்கிய மற்றும் பாதிக்கப்பட்டி ருக்கக்கூடிய சமூகங்களில் ஒன்று என்றும், பழங்குடியினர் பட்டியலில் அவர்களைச் சேர்ப்பதன் மூலம், அவர்கள் அனைத்து அரசமைப்பு ரீதியிலான பாதுகாப்பு மற்றும் நலத் திட்டங்களைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
இது தொடர்பாக பல கோரிக்கைகள் அளிக்கப்பட்டிருந்தும், இந்த சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது என்றும் எனவே, இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, நரிக்குறவன், குருவிக்காரன் சமூகத்தினரை தமிழ்நாட்டிலுள்ள பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டியிருந்தார். இந்தநிலையில், நரிக்குறவர், குருவிக்காரர் என அழைக்கப்படுவோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர்- குருவிக்காரர் பிரிவினருக்கும் கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.