பாஜக ஆட்சியில் ரயில்வே துறை வேகமாக வளர்ந்துள்ளது:மத்திய மந்திரி எல் முருகன்

யுனெஸ்கோ அந்தஸ்து பெற்று 18 ஆண்டுகள் நிறைவடைந்து 19-ம் ஆண்டில் இந்த நீலகிரி மலை ரயில் காலடி எடுத்து வைத்துள்ளது;

Update: 2023-07-15 14:00 GMT

ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரெயில் கூடுதல் பெட்டிகளுடன் இன்று இயக்கப்பட்டது. இதனை மத்திய மந்திரி எல். முருகன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 2005-ம் ஆண்டு ஜூலை 15-ந் தேதி தென்னாப்பிரிக்க நாட்டில் உள்ள டர்பனில் நடைபெற்ற வேர்ல்ட் ஹெரிடேஜ் கமிட்டி இந்தியாவில் புகழ்பெற்ற மலை ரெயில்களில் ஒன்றான நீலகிரி மலை ரெயிலுக்கு யுனெஸ்கோ அந்தஸ்து வழங்கியது.யுனெஸ்கோ அந்தஸ்து பெற்று 18 ஆண்டுகள் நிறைவு பெற்று தற்போது 19-ம் ஆண்டில் இந்த நீலகிரி மலை ரெயில் காலடி எடுத்து வைத்துள்ளது. 

மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளின் கோரிக்கையினை ஏற்று கடந்த ஏப்ரல் மாதம் முதல் இயக்கப்பட்டு வரும் சிறப்பு மலை ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரெயில் கூடுதல் பெட்டிகளுடன் இன்று இயக்கப்பட்டது. இதனை மத்திய மந்திரி எல். முருகன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முன்னதாக யுனோஸ்கோ அந்தஸ்து பெற்று 18 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மேலும், ரூ. 1. 25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன பயணச்சீட்டு மைய கட்டிடத்தையும் மத்திய மந்திரி எல். முருகன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு  அமைச்சர் முருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:  கடந்த 9 ஆண்டுகளாக பா. ஜ. க ஆட்சியில் ரெயில்வே வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்த 25 ஆண்டுக்கு பின் ரெயில்வே நிர்வாகம் அசுர வளர்ச்சி பெறும். கடந்த தி. மு. க. , காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்திற்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் ரூ. 800 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. தற்போது பா.ஜ.க ஆட்சியில் 6 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திற்கு 9 புதிய ரெயில் திட்டங்கள் மற்றும் வழித்தடங்களை கொண்டு வந்துள்ளோம்.

அம்ருத் திட்டம் மூலம் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பில் ரெயில்வே மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக ரெயில் நிலையத்தில் எக்ஸ்லேட்டரும் அமைக்கப்பட உள்ளது. மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே ரூ. 50 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. மேட்டுப்பாளையம்-கோவை இடையே தற்போது 8 பெட்டிகளுடன் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் கூடுதலாக பெட்டிகள் இணைத்து 12 பெட்டிகளுடன் ரெயிலை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் முருகன்.

இதில் மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ.- ஏ.கே. செல்வராஜ், சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா, சேலம் கோட்ட உதவி மேலாளர் சிவலிங்கம், வணிக மேலாளர் பூபதி ராஜ், முதுநிலை கோட்ட எந்திரவியல் பொறியாளர் பரிமளக்குமார், பாஜக மாவட்ட தலைவர் சங்கீதா, துணைத்தலைவர் விக்னேஷ், மேட்டுப்பாளையம் முன்னாள் நகர் மன்ற தலைவர் சதீஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News