தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த வளர்ப்பு நாய்: இறுதிச் சடங்கு செய்த குடும்பம்
வீட்டில் ஒருவர் மரணித்தால் என்ன ஈமக்காரியங்கள் செய்வது போல இறுதி சடங்குகள் செய்வதென குடும்பத்தினர் முடிவு செய்தனர்.;
கோவை மேட்டுப்பாளையம் மணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்வேல். இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர் தனது வீட்டில் கடந்த ஆறு ஆண்டுகளாக ஆண் நாய்க்கு ஷேடோ என்று பெயர் சூட்டி பாசத்துடன் வளர்த்து வந்தார். இந்த நாய் பின்நாளில் அவரது குடும்பத்தில் ஒருவராகவே மாறிவிட்டது.
இந்நிலையில் ஷேடோ நேற்று வீட்டில் இருந்து வெளியே வந்தது. அப்போது தெருவில் சுற்றித் திரிந்த நாய்கள் கடித்து குதறின. இதில் ஷேடோவுக்கு படுகாயம் ஏற்பட்டது. தொடர்ந்து அந்த குடும்பத்தினர் குட்டி நாயை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நாயை பரிசோதித்த மருத்துவர்கள் உடலில் விஷம் கலந்ததால் உடல் உறுப்புகள் செயலிழந்து விட்டதாகவும், உயிர் பிழைப்பது கடினம் என தெரிவித்தனர். தொடர்ந்து அவர் குடும்பத்தினர் கண்ணீருடன் ஷேடோவை வீட்டுக்கு கொண்டு வந்து பராமரித்து வந்தனர்.
இந்நிலையில் அந்த நாய் பரிதாபமாக உயிரிழந்தது. வாழ்வில் பிரிக்க முடியாத பிணைப்பாக மாறிய ஷேடோ நாய்க்கு மரியாதை செலுத்தும் விதமாக அதன் மேல் உள்ள பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக வீட்டில் ஒருவர் மரணித்தால் என்ன ஈமக்காரியங்கள் செய்வது போல இறுதி சடங்குகள் செய்வதென அந்த குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
தொடர்ந்து உயிரிழந்த நாய்க்கு மாலை அணிவித்து, வீட்டில் விளக்குகள் ஏற்றி வைத்தும் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. பின்னர் இன்று காலை அந்நாய் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் அங்குள்ள சுடுகாட்டில் வளர்ப்பு நாய் ஷேடோ அடக்கம் செய்யப்பட்டது.