மண் சரிவால் நீலகிரி மலை இரயில் சேவை இரத்து: சீரமைக்கும் பணிகளில் ஊழியர்கள்

ரயில் பாதையை சீரமைக்கும் பணிகளில் இரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2024-05-23 04:15 GMT

மண் சரிவு

கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர் கனமழை பெய்கிறது.

இந்த நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு பரவலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக கல்லாறு - ஹில்கிரோவ் இடையேயான ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மண் மற்றும் பாறைகள் ரயில் பாதையில் சரிந்து விழுந்தன. இதனால் மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான நீலகிரி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல உதகை - மேட்டுப்பாளையம் இடையேயான நீலகிரி மலை ரயில் சேவையும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் பாதையை சீரமைக்கும் பணிகளில் இரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த மலை இரயிலில் பயணிக்க முன்பதிவு செய்த பயணிகளுக்கு பயணச்சீட்டு தொகை முழுகையாக திரும்ப வழங்கப்படும் என இரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் ரயில் பாதை சீரமைக்கப்பட்ட பின்னர் மீண்டும் மலை ரயில் இயக்கப்படும் என ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 18 ம் தேதி மண் சரிவு காரணமாக மலை ரயில் சேவை இரத்து செய்யப்பட்ட நிலையில், சீரமைப்பு பணிகளுக்கு பிறகு நேற்று மீண்டும் நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் மண் சரிவு காரணமாக நீலகிரி மலை இரயில் இரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News