மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி இடையே ரயில் சேவை துவக்கம்
துறைமுக நகரமான தூத்துக்குடியை இணைக்கும் இந்த ரயில் சேவையின் மூலம் தொழில் துறையினர் உள்ளிட்டோர் பயனடைவார்கள்.;
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் தூத்துக்குடி வரை செல்லும் வாரம் இருமுறையிலான எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று துவக்கப்பட்டுள்ளது. இதனை, மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து துவக்கி வைத்தார்.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து இரவு 7.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் அதிகாலை 4.20 மணி அளவில் தூத்துக்குடி ரயில் நிலையத்தை சென்றடையும். இதேபோல் மறு மார்க்கமாக தூத்துக்குடியில் இருந்து வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10.50 க்கு இந்த ரயில் மேட்டுப்பாளையம் நோக்கி புறப்படுகிறது.
கோயம்புத்தூர் ரயில் நிலையம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் ரயில் நிறுத்தங்களைக் கொண்ட இந்த ரயில் சேவையில், குளிரூட்டப்பட்ட பெட்டிகள், படுக்கை வசதி மற்றும் பொது பிரிவு இருக்கை வசதிகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து துறைமுக நகரமான தூத்துக்குடியை இணைக்கும் இந்த ரயில் சேவையின் மூலம் தொழில் துறையினர், சுற்றுலா பயணிகள், ஆன்மீகவாதிகள், மாணவர்கள் மற்றும் பலர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், போத்தனூர் வரை நீட்டிக்கப்படும் கோயம்புத்தூர் - மேட்டுப்பாளையம் இடையேயான மெமோ ரயில் சேவைகளையும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் துவக்கி வைத்தார். இது கோவையின் முக்கிய பகுதியான போத்தனூரை கோவையின் தெற்கு பகுதி மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளோடு இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றோடு, வாரம் 4 நாட்கள் இயக்கப்படும் கோயம்பத்தூர் திருப்பதி இடையேயான ரயில் சேவை சாமல்பட்டியில் நின்று செல்வதற்கான வசதியும் இன்று துவக்கி வைக்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “புகழ்பெற்ற சுற்றுலா தளமாக விளங்கும் நீலகிரி மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளை தென் மாவட்டங்களோடு இணைக்கும் இந்த ரயில் சேவையால் சுற்றுலாப் பயணிகள் பயனடைவதோடு, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் தொழில்துறையினர் தங்களது தயாரிப்புகளை பிற பகுதிகளுக்கு அனுப்ப இந்த ரயில் சேவை பெரிதும் உதவும் என குறிப்பிட்டார்.
மேலும், வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப்படும் மேட்டுப்பாளையம் தூத்துக்குடி இடையேயான ரயில் சேவை, அனைத்து நாட்களிலும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதி அளித்தார்.