கோவை: ஊரடங்கில் பரிதவிப்பவர்களுக்கு சேமிப்பு தொகையில் இருந்து உணவு வழங்கிய மாணவர்

கோவையில், செல்போன் வாங்குவதற்காக சேமித்த 7 ஆயிரம் ரூபாயில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்கள், ஏழைகள் 50 பேருக்கு உணவு வாங்கித்தந்த மாணவரை பலரும் பாராட்டினர்.

Update: 2021-06-04 11:08 GMT

கோவை அன்னூரை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவர் சஞ்சீவ், தனது சேமிப்பு பணத்தில், ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கினார். 

கோவை மாவட்டம் அன்னூர்,  சக்தி சாலை பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் அப்பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது 16 வயது மகன் சஞ்சீவ், அப்பகுதி தனியார் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், செல்போன் வாங்குவதற்காக தான் சேமித்து வைத்திருந்த  7 ஆயிரம் ரூபாய் பணத்தில், கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்கள், ஆதரவற்றவர்கள் மற்றும் ஏழைகள் 50 பேருக்கு, உணவுப்பொருட்களை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து பள்ளி மாணவர் சஞ்சீவ் கூறுகையில், "செல்போன் வாங்குவதற்காக பல மாதங்களாக பணம் சேமித்து வைத்துக் கொண்டிருந்தேன். ஊரடங்கினால் வயதான முதியவர்கள், இல்லாதவர்கள் கஷ்டப்படுவதை பார்த்து வருத்தமாக இருந்தது.

எனவே, சேமிப்பு பணம் 7 ஆயிரம் ரூபாயில் வயதான முதியவர்கள், இல்லாதவர்கள் 50 பேருக்கு உணவுப் பொருட்களை வழங்கினேன்.  செல்போன் வாங்குவதில் கிடைக்கும் சந்தோஷத்தைவிட, இவர்களுக்கு உணவு அளித்தது மிகவும் திருப்தியாக உள்ளது" என்றார்.

Tags:    

Similar News