கோவையில் டாஸ்மாக் கடைகள் நாளை திறப்பு - ஏற்பாடுகள் தீவிரம்
கோவை மாவட்டத்தில், டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்படும் நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.;
தமிழகம் முழுவதும் நாளைமுதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு, பஸ் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இனி காலை 10 மணி முதல், இரவு 8 மணி வரை கடைகள் இயக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒரேநேரத்தில் 5 பேருக்கு மேல் மதுபானம் கொடுக்க கூடாது. கடை அருகே மது அருந்த அனுமதிக்க கூடாது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு மதுபானம் விற்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை, டாஸ்மாக் கடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில், டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து தனிநபர் இடைவெளியுடன் மதுப்பிரியர்கள் மதுவாங்கும் வகையில், டாஸ்மாக் கடைகளில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் மதுபானங்கள் தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனைக்கு தயாராகி வருகின்றன.
கோவையில் புலியகுளம், ராமநாதபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மதுபான கடைகள் முன்பு மதுப்பிரியர்கள் வரிசையில் நிற்கும் வகையில், கம்புகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு தனிநபர் இடைவெளியுடன் அவர்கள் காத்திருக்கும் வகையில் வட்ட வடிவில் கோடுகள் வரையப்பட்டுள்ளன.