வெள்ளலூரில் சேறும் சகதியுமாக இருக்கும் சாலைகள் ; மாணவர்கள் கடும் அவதி
பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.;
கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சக்தி விநாயகர் நகர், இடையர்பாளையம், மசராயன் கோவில் வீதி, பட்டக்காரர் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் மற்றும் எரிவாயு இணைப்பு பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டன. ஆனால் அச்சாலைகள் சீரமைக்கப்படாமல் இருப்பதால், குழியும் மேடுமாக இருக்கின்றன. மேலும் மழைக் காலங்களில் சாலைகள் சேறும் சகதியுமாக காணப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக சாலைகளில் மக்கள் செல்ல முடியாத நிலை இருக்கிறது. வாகனங்கள் சேற்றில் சிக்கி வருவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக மசராயன் கோவில் வீதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு செல்லும் சாலைகள் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. மேலும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வெள்ளலூரில் பெரும்பாலான சாலைகள் சேறும் சகதியுமாகவும், குழியும் மேடுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். இந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.