கோவை வெள்ளலூரில் சேறும், சகதியுமாக இருக்கும் சாலைகள்: மக்கள் அவதி
கோவை வெள்ளலூரில் சாலைகள் அனைத்தும் சேறும் சகதியுமாக இருப்பதால், சாலைகளில் செல்ல முடியாத நிலை இருக்கிறது.;
கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் பல்வேறு சாலைகளில் எரிவாயு இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களாக சாலைகளை தோண்டி இந்தப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. தற்போது மழைக்காலம் என்பதால், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழைக்காலத்திலும் இந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால், சாலைகள் அனைத்தும் சேறும் சகதியுமாக இருக்கிறது. இதனால் அந்த சாலைகளில் செல்ல முடியாத நிலை இருக்கிறது. அந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் அந்த சாலையில் கடும் சிரமத்திற்கு இடையே பயணித்து வருகின்றனர். சேறு அதிகளவில் இருப்பதால் நடப்பவர்களும் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “கேஸ் மற்றும் குடிநீர் இணைப்பிற்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை கோடைக்காலத்திலேயே முடித்து இருக்க வேண்டும். தற்போது மழைக்காலத்தில் பணிகள் நடப்பதால், சாலைகள் அனைத்தும் சேதமடைந்து சேறும், சகதியுமாக உள்ளது. இச்சாலைகளில் பயணிப்பவர்களின் உடைகளும், வாகனங்களும் சேறும், மண்ணும் அப்பி அழுக்கு அடைக்கின்றன. இந்த சாலைகளில் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இந்தப் பணிகளை விரைந்து முடித்து சாலைகளை சீரமைத்து தர வேண்டும்” எனத் தெரிவித்தனர்.