பாஜகவில் சமூக விரோதிகள் மட்டும் தான் இருக்கின்றனர் : டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு..!

இந்த சமுதாயத்திற்கு தீங்கு செய்யக்கூடிய ஒட்டு மொத்த விரோதிகள் அந்த இயக்கத்தில் தான் போய் சேர்ந்து இருக்கின்றார்கள்.

Update: 2024-04-11 10:15 GMT

டிஆர்பி ராஜா வாக்குசேகரிப்பு

கோவை கரும்புகடை பகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதன் பின்னர் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகள். இந்தியாவின் தலை எழுத்தை மாற்றியமைக்கும் காலகட்டம் இது. பாசிச, பிரிவினைவாத சிந்தனைகளுக்கு எதிரான, மாநில உரிமைகளை மீட்டெடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. கரும்புகடை பகுதியில் பிரசார நோட்டீஸ் கொடுக்கும் முன்னரே, உதயசூரியனுக்கு தான் எங்கள் வாக்கு என்கின்றனர்.

இந்த பகுதியில் அடக்குமுறை தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளவர்களின் வலிக்கான நிவாரணமாக திமுக இருக்கிறது. வாழ்க்கையில் ஒடுக்குமுறைகளுக்கு ஆளான நபர்களின் பாதுகாவலராக ஸ்டாலின் இருக்கிறார். ஸ்டாலின் பக்கம் ஒட்டு மொத்த கோவையும், ஒட்டு மொத்த தமிழகமும் இருக்கின்றது. பிரசாரம் அட்டகாசமாக போய் கொண்டு இருக்கின்றது. எல்லா பகுதியிலும் தன்னார்வலராக இளைஞர்கள் அவர்களே வந்து உதய சூரியனுக்கு வாக்கு சேகரிக்கின்றனர். இதுவே மக்களின் எண்ண ஓட்டமாக இருக்கின்றது. கோவையில் பிரமாண்டமான வெற்றி திமுக பெறும்” எனத் தெரிவித்தார்.

கோவையில் 60 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று விடுவேன் என பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை சொல்லி இருப்பது குறித்த கேள்விக்கு, “தூங்கி கொண்டு இருப்பவர்களை, கனவு கண்டு கொண்டு இருப்பவர்களை என்ன சொல்வது? அதிமுக என்ற எதிர் கட்சி ஒன்று தேர்தலில் இருக்கின்றது.

அதை பற்றி ஏதாவது கேளுங்கள். நீங்களே அவர்களை மறந்து விட்டீர்களா? இரண்டும் ஒன்று என முடிவு செய்து விட்டீர்களா? பா.ஜ.க வில் இருக்கும் சமூக விரோதிகள் பட்டியலை ஐடி விங் மூலம் வெளியிட்டு இருக்கின்றோம். தேவைப்பட்டால் நோட்டீஸ் போட்டு ஒட்டுகின்றோம். சமூக விரோதிகளை எடுத்து விட்டால் பா.ஜ.கவில் ஆளே இருக்க மாட்டார்கள்.

பா.ஜ.க முழுவதும் சமூக விரோதிகள் மட்டும் தான் இருக்கின்றனர். இந்த சமூகத்திற்கும், சமுதாயத்திற்கும் ஒட்டு மொத்த விரோதிகள் அந்த இயக்கத்தில் தான் போய் சேர்த்து இருக்கின்றார்கள். அந்த காலத்தில் அற்புதமான தலைவர்கள், வாஜ்பாய் போன்ற தலைவர்கள் பா.ஜ.கவில் இருந்தனர். சமீபகாலமாக காவல் நிலையத்தில் தேடப்படுவர்களின் பட்டியலை வாங்கி விடுவார்கள் போல.

அதில் இருப்பர்களை டிக் அடித்து கூட்டிட்டு வருகின்றனர். இதில் என்ன கொடுமைன்னா, நிர்மலா சீத்தாராமனே இதை ஒப்புகொண்டு இருக்கின்றார். தவறு செய்தவர்களை சேர்த்து கொள்வீர்களா என்று கேட்கும் போது, அந்த அம்மையார் ஆமாம் என்கின்றார். இது எப்படி சரி என்று தெரியவில்லை. அதிமுக இல்லத்தில் இருக்கும் பெண்கள் நிச்சயமாக இந்த முறை திமுகவிற்கு வாக்களிப்பார்கள். பா.ஜ.க திசை மாறி போய் கொண்டு இருக்கின்றது. தனி நபர்களுக்கான இயக்கமாக மாறி வருகின்றது என நினைப்பவர்கள் அனைவரும் திமுகவிற்கு வாக்களிப்பார்கள்” எனத் தெரிவித்தார். 

Tags:    

Similar News