கோவை ஓணம் பண்டிகை விழாவில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய மகாபலி மன்னர்
கோவையில் பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளிகளிலும் ஓணம் பண்டிகை விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
மலையாள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை வருகின்ற ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் சார்பில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தில் மலையாள மக்களால் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக கோவை பாலக்காடு சாலையில் உள்ள ஏஜேகே என்ற தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஓணம் பண்டிகையின் முக்கியமான மன்னராக கருதப்படும் மகாபலி மன்னர் வேடமணிந்த மாணவரை ஹெலிகாப்டர் மூலம் கல்லூரிக்கு அழைத்து வந்தனர். இது அங்கிருந்த மாணவர்கள் கல்லூரி ஆசிரியர்கள் நிர்வாகிகள் அனைவருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.மகாபலி மன்னருக்கு மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து வரவேற்பு அளித்தனர்.
மேலும் பூ கோலமிட்டு மோகினி ஆட்டம், களறி ஆகியவையும் நடைபெற்றன. மேலும் இந்நிகழ்வில் கல்லூரி மாணவ மாணவிகள், ஓணம் சேலை, வேஷ்டி சட்டை, வண்ண வண்ண புத்தாடை அணிந்து ஜமாப், செண்டைமேளம், சினிமா பாடல்களுக்கு ஏற்ப உற்சாக நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டடினர். இதேபோல பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளிகளிலும் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.